தமிழ்ச் சமூகத்தை வழி நடத்த தீர்க்கதரிசனமும் ஆளுமை உடைய ஒரு தேசிய தலைமை இன்று இல்லை…! ஐங்கரநேசன் ஆதங்கம்…!

தமிழ்ச் சமூகத்தை வழிநடத்தத் தீர்க்கதரிசனமும் ஆளுமையும் கொண்ட, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தேசியத் தலைமை இன்று இல்லாமையால் சகல துறைகளுமே தகுந்த தலைமைத்துவங்கள் இன்றித் தள்ளாடுவதாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (17)  யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவுக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சிறந்த தலைமைத்துவப் பண்பின் வெளிப்பாடு தொடர்ச்சியாக தலைமைப் பதவிகளில் அமர்வது அல்ல. உரிய நேரத்தில் தலைமை வகிபாகத்தைப் பொருத்தமான இன்னொருவரிடம் கையளிப்பதுதான் தலைமைத்துவப் பண்புகளில் மிகவும் உயர்வானது.

மற்றையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும் உயரிய இந்தத் தலைமைத்துவப் பண்பு மாணவர்களிடம் உள்ளது. ஆனால் அத்தியாவசியமான இந்தப் பண்பு இன்றைய எமது அரசியல் தலைவர்களிடம் அறவே இல்லை.

தமிழ்ச் சமூகத்தை வழிநடத்த  தீர்க்கதரிசனமும் ஆளுமையும் கொண்ட, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தேசியத் தலைமை இன்று இல்லை. சகல துறைகளுமே தகுந்த தலைமைத்துவங்கள் இன்றித் தள்ளாடுகின்றன.

பல்லுப்போய் சொல்லுப்போனாலும் தானே இன்றும் சிறந்த பாட்டுக்காரன் என்பது போலத் தள்ளாத வயதிலும் தலைமைக் கதிரையில் நிரந்தரமாக அமரவே எமது தலைவர்கள் ஆசைப்படுகின்றார்கள்.

அந்தக் கதிரையை எட்டுவதற்குப் போட்டாபோட்டிகள் இடம்பெறுகின்றன. இந்தத் தலைமைத்துவச் சீரழிவே மேலிருந்து கீழாகச் சமூகத்தின் சகல மட்டங்களிலும் இன்று நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளது.

மாணவ சமூகம் குறித்துப் போதைப்பொருள் பாவனை உட்படப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும், இன்றைய மாணவர்களிடமிருந்துதான் நாளைய எமது தலைவர்கள் உருவாக வேண்டும். அந்த நம்பிக்கை இன்னும் பட்டுப்போகவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *