முஸ்லிம் பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு..! வெளியான சுற்றுநிருபம்

 ‘பாடசாலை விடுமுறை காலத்தை வினைத்திறன் மிக்கதாய் களிப்பதற்குரிய வழிகாட்டல்’ என்ற தலைப்பில் கல்வி அமைச்சு முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2024 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதற்கட்ட விடுமுறை 2024 மார்ச் 08 முதல் ஏப்ரல் 16 வரை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை முஸ்லிம்கள் 2024 மார்ச் 12 தொடக்கம் ஏப்ரல் 04 வரை புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு கல்வி அமைச்சு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளது.

அதற்கமைய, விடுமுறை காலத்தில் பாடசாலை சூழலை டெங்கு நுளம்புகள் பரவாதவாறு சுத்தமாக வைத்திருத்தல், தற்போது நிலவும் வரட்சி நிலை காரணமாக பாடசாலை வளாகத்தினுள் உள்ள மரம் செடிகள் இறந்து விடாது நீரை ஊற்றி பாதுகாத்தல் மற்றும் பாடசாலையின் சகல உடைமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ரமழான் நோன்பு காலத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோருக்கு ஆன்மீக செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலைகளில் காணப்படும் வசதி வாய்ப்புக்கு ஏற்றவாறு நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்து “நோன்பின் மாண்புகள்” பற்றி இஸ்லாமிய அறிஞர்களைக் கொண்டு சொற்பொழிவு ஒன்றினை நிகழ்த்தச் செய்யுமாறும்,

 எமது நாட்டின் நலனுக்காகவும் சகல சமூகத்தினரும் ஒற்றுமையாகவும் சமாதானத்துடனும் வாழ்வதற்காகவும் பிரார்த்தனை செய்யுமாறும் சுற்று நிருபத்தின் ஊடாக அதிபர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *