அ.தி.மு.கவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிமுகம் – பிரசார மேடையில் ஏறும் எடப்பாடி!

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் இன்று அறிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முதல் ஆரம்பமானது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க, தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றது.

அதன்படி, தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும், எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 33 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக தேர்தலை சந்திக்கவுள்ளது.

இதற்கிடையே, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் 24 ஆம் திகதி மாபெரும் பிரசாரமொன்றை திருச்சியில் ஆரம்பிக்கவுள்ளார்.

இந்த பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டொக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக 26 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply