வெடுக்குநாறிமலையில் கோயில்கள் ஏதும் இல்லை; கைதுகள் தொடரும்..! அமைச்சர் விடுத்த எச்சரிக்கை..!

 

வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிகழ்நிலை காப்புச் சட்ட வரைபு 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. நிகழ்நிலைகளில் இடம்பெறும் வன்முறை மற்றும் மோசடிகளை கருத்திற் கொண்டு இச்சட்டம் விரைவாக இயற்றப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் திருத்தங்களுடன் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதை சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் பின்னரும் ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதை அறியமுடியவில்லை. பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்குமாறு ஜனாதிபதி பரிந்துரைத்த போது அரசியலமைப்பு பேரவையின் 5 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினார்கள்.

பதில் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் ‘யுக்திய’ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது ஒரு தரப்பினர் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள். அரசியலமைப்பின் பிரகாரம் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் இரு உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபர் நியமனம் மீதான வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட வாக்களிப்பை புறக்கணித்தமை அரசியல் சூழ்ச்சி என்றே கருதுகிறேன். 

இந்த விவாதத்தில் வெடுக்குநாறிமலை பற்றி பேசப்பட்டது. கோயிலுக்கு சென்றவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. 

வெடுக்குநாறி மலையில் எந்த கோயில்களும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறேன். இந்த மலையை தொல்பொருள் திணைக்களம் அநுராதபுர யுகத்துக்கு சொந்தமான தொல்பொருள் மரபுரிமைகள் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளது.

பௌத்த மத மரபுரிமைகள் உள்ள பகுதியில் பிறிதொரு தரப்பினர் தமது மத வழிபாடுகளை முன்னெடுக்கும் போது முரண்பாடுகளே தோற்றம் பெறும். 2023 ஆம் ஆண்டு இந்த மலையில் சட்டவிரோதமான முறையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததும் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.

மார்ச் 04 ஆம் திகதி மதிமுகராசா என்ற பூசகர் வெடுக்குநாறி மலையில் பூஜை வழிபாட்டில் ஈடுபட வவுனியா நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில் மார்ச் 08 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று 400 பேர் வரை இந்த மலைக்கு சென்றுள்ளார்கள்.

மாலை 06 மணி வரை மலையில் இருக்க முடியும்,06 மணிக்கு பின்னர் அங்கு எவரும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்த நிலையில் சுமார் 40 பேர் இரவு 08 மணிவரை அங்கு இருந்துள்ளார்கள்.

வெடுக்குநாறிமாலையில் இரவு 08 மணிவரை தங்யிருந்தவர்கள் அடுப்பு பற்ற வைத்து சட்டவிரோதமான முறையில் செயற்பட முற்படுகையில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் பின்னரே 08 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பௌத்த மரபுரிமைகள் உள்ள இடங்களுக்கு சென்று முறையற்ற வகையில் செயற்பட்டால் பிரச்சினைகளே தீவிரமடையும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

சட்டவிரோதமான முறையில் எவர் செயற்பட்டாலும் கைதுகள் இடம்பெறும். இந்து கோயில்களுக்கு சென்று பிற மதத்தவர்கள் முறையற்ற வகையில் செயற்பட்டால் அவர்களையும் நாங்கள் கைது செய்வோம். 

ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைபட்சமாக கருத்து தெரிவிப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *