வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவை இணைந்து ஏப்ரல் 3ஆம் திகதி முதல் ஒவ்வொரு பாடசாலைகளிலும் வீதி பாதுகாப்பு ஒன்றியங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்வேறு படிமுறைகளின் கீழ் இத்திட்டத்திற்காக பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதக்கம் வெள்வோர் சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சையிலிருந்து விடுவிக்கப்படுவர். கல்வியற் கல்லூரிகளிலும் வீதி போக்குவரத்து தொடர்பிலான ஒன்றியங்களை நிறுவி மேற்கூறியது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்பார்த்திருக்கிறோம்.
அதற்கு மேலதிகமாக வீதி விதிமுறைகள் மற்றும் வீதி போக்குவரத்து தொடர்பிலான அறிவை பாலர் பாடசாலை மட்டத்தில் பெற்றுகொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.