வெடுக்குநாறி மலையில் பக்தர்களுக்கு இடையூறு…! அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்…!மக்கள் பணிமனையின் நேசக்கரங்கள் அமைப்பு வலியுறுத்து…!

வெடுக்குநாறி மலை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபடும் பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்படும் சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாது என்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென மக்கள் பணிமனையின் நேசக்கரங்கள் அமைப்பின் தலைவர் மௌலவி B.A.S சுப்யான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று(23) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த சிவராத்திரி தினத்தன்று வவுனியா மாவட்டத்தின் வெடுக்கு நாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட விவகாரம், பல்வேறு தரப்பினராலும் கண்டனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், மக்கள் பணிமனையின் “நேசக்கரங்கள்” அமைப்பும் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றது.

தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பொழுதிலும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம் பெறாது இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில், இனங்களுக்கிடையே மேலாண்மை போட்டி நிலவுவதானது இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டினை எவ்விதத்திலும் முடிவிற்கு கொண்டுவர முடியாமல் போகும்.

நாடு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ வேண்டுமானால் இலங்கையில் இனங்களுக்கிடையிலுள்ள முரண்பாடுகள், மேலாதிக்கங்கள் களையப்பட வேண்டும். விட்டுக் கொடுப்பும் ஏனைய மதங்களின் வழிபாட்டு முறைகளை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால், இலங்கையில் காலகாலமாக மத மேலாதிக்கமும் இதற்கு சில மதத்தலைவர்களே முன்னிட்டு இவ்வாறான முரண்பாடுகள் வளர்வதற்கு முயற்சிப்பதையும் இதற்கு சில அரசியல் தலைமைகளும் முண்டு கொடுத்து வருவதையும் நாம் பார்க்கின்றோம். இந்த நிலை மாறாத வரையில் இந்நாட்டுக்கு மீட்சி விமோசனம் என்பது கேள்விக்குறியாகிவிடும்.

எனவே, இலங்கை அரசாங்கம் இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு பொலிஸார் உட்பட பாதுகாப்புத் தரப்பினருக்கும் பணிப்புரை விட வேண்டும்.

மேலும் தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் மறுசீரமைக்கப்பட்டு உண்மையான வரலாறுகளை அறிந்து நீதியாக தனது நடவடிக்கையை எந்த இனத்திற்கும், மதத்திற்கும் பாதிப்படையாதவாறு முன்னெடுக்க அரசாங்கம் பணிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply