திருகோணமலையில் விவசாயிகளின் புதிய முயற்சி..!

திருகோணமலை, திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். 

இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண் மூடைகளை 15 அடி உயரத்திற்கு அடுக்கி ஆற்றை வழிமறிப்பதற்கும் இதன்மூலம் 300 தொடக்கம் 350 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

திரியாய் நீலபனிக்கன் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீர் வசதி இன்றி தரிசு நிலங்களாக காணப்படுகின்றன. இவற்றுக்கான நீர்வசதி வழங்கப்படும் பட்சத்தில் அனைத்து நிலங்களிலும் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியும் எனவும்,  கடந்த வருடம் குறித்த ஆற்றை மறித்து 150 ஏக்கரில் விவசாயம் மேற்கொண்டதாகவும் இந்த வருடம் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் சிறுபோக விவசாயம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் அணைக்கட்டை அமைத்து விவசாயம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இரு போகமும் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

திரியாய் விவசாயிகள் தங்களுடைய பாரிய முயற்சியின் காரணமாக 1300க்கு மேற்பட்ட மண் மூடைகளை அடுக்கி குறித்த ஆற்றை மறித்து நீரை வயல்களுக்கு திருப்பியுள்ளனர். 

 

Leave a Reply