ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து பொதுவாக்கெடுப்பு முறைக்கு ஆதரவு…! அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அன்டனி பிளிங்கெனிற்கு கடிதம்…!

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து, மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அவர்களுக்குள்ள உரிமைகளின் அடிப்படையில், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உலகளாவிய ரீதியில்  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிமுறையான பொதுவாக்கெடுப்பு முறையை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டொனால்ட் ஜி டேவிஸ் வைலிநிக்கலஸ் ஜோன்கொதைமர் ஜெப்ஜக்சன் சமர்லீ டானி கே டேவிஸ் சூசன் வைல்ட் ராஜாகிருஸ்ணமூர்த்தி ஜமால்போமன் கேப்வாஸ்குவாஸ் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைப் போர் மே 18, 2009 அன்று முடிவடைந்த 15 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த இந்த பேரழிவுகரமான மோதல், தேசம், அதன் மக்கள் மற்றும் குறிப்பாக தமிழ் சமூகத்தின் மீது ஆழமான மற்றும் நீடித்த வடுக்களை விட்டுச் சென்றுள்ளது.

1983 இல் தொடங்கி 2009 இல் முடிவடைந்த இந்தப் போரானது, பொதுமக்களுக்கு எதிரான பயங்கரமான அட்டூழியங்களை உருவாக்கியது. இதில் 170,000 தமிழர்கள் வரையில் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என மதிப்பிடப்பட்டள்ளதுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினராலும் பரவலான மனித உரிமை மீறல்களும் இழைக்கப்பட்டது.

2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த மீறல்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளுக்கு சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைக்க உறுதியளித்தார், அத்தகைய விசாரணைகளை எளிதாக்குவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் 30/1 மற்றும் 40/1க்கு இணை அனுசரணை வழங்கினார்.

இறுதிக் கட்டப் போரின் போது பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, 2020 ஆம் ஆண்டில் இந்த உறுதிமொழிகளிலிருந்து நாடு விலகிக் கொண்டது தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் தற்போது இடம்பெறும் காணி அபகரிப்புகள் அவர்களது சுய-ஆட்சியற்ற-பிரதேசமாக (non-self-governing territory) உள்ள தமிழர்களின் தாயகத்தை மேலும் அரித்து வருகின்றன.

அரசியல் விமர்சகர்கள், அதிருப்தியாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிராக அரசாங்கம் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது, தமிழர்கள் உட்பட இலங்கையர்களின் உரிமைகளைத் தொடர்ந்து மீறுகிறது.

முக்கிய உலகளாவிய கப்பல் வழித்தடங்களுக்கு அருகில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய இருப்பிடம் அமெரிக்க தேசிய நலன்களுக்குத் தேவையான பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

கடந்தகால மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வதும், மோதலுக்கான மூல காரணங்களைக் கையாள்வதும் எதிர்கால வன்முறையைத் தடுப்பதற்கு இன்றியமையாததாகும். குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதும், ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு ஏற்ப தமிழ் மக்கள் அவர்களின் எதிர்காலத்தை ஜனநாயக ரீதியாக தீர்மானிக்க உதவுவதும் இலங்கையில் நல்லிணக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாததாகும்.

துரதிஷ்டவசமாக இலங்கையில் ஐ நா வின் உண்மை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. இந்த பிரச்சனையை சுயாதீனமாக தீர்ப்பதற்கான விருப்பும் மற்றும் திறனும் இன்மையை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமெரிக்கா இந்த நீடித்து வரும் பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டும். உக்ரைன், கொசோவோ, கிழக்கு திமோர், தெற்கு சூடான் போன்ற நாடுகளில் சுயநிர்ணய உரிமைக்காக நாங்கள் காண்பித்த ஆதரவிற்கு ஏற்ப, உலகளாவில் எமது கொள்கைகளை நாம் மாற்றமின்றி கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் பின்வரும் நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளுமாறு வெளியுறவுத் துறையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

1 ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து, மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அவர்களுக்குள்ள உரிமைகளின் அடிப்படையில், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உலகளாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிமுறையான பொதுவாக்கெடுப்பு முறையை (Referendum)ஆதரிக்கவும்.

2. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் பரிந்துரைகளைப் பின்பற்றி போரின் போது பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு விரிவான சர்வதேச விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கவும் அத்தகைய விசாரணையில் இனப்படுகொலை (Genocide) செய்யப்பட்டதா என்பது பற்றிய ஆராய்வதும் அடங்கும்.

சுயாதீனமான நீதித்துறை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் சாத்தியமான குற்றச்சாட்டுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு international Criminal Court) விசாரணைகளுக்காகப் பரிந்துரைக்கவும் அமெரிக்காவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில்  பொதுச் சபை (General Assembly), பாதுகாப்பு கவுன்சில் (Security Council) மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட உள்ள தலைமைப் பாத்திரத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தவும்,

இந்த முக்கியமான பிரச்சினையை நீங்கள் கருத்தில் கொண்டதை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும் நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதில் உங்களது தலைமைத்துவத்தை எதிர்பார்க்கிறோம் vஎனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply