மயிலிட்டி துறைமுகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்…!

மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மயிலிட்டி துறைமுகத்தில்  தொடர்ந்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம்(30) மயிலிட்டி இறங்குதுறைப் பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.

மேலும், மயிலிட்டி இறங்குதுறை பகுதியில் அதிகளவான நீண்டநாள் தொழில் மேற்கொள்ளும் ரோலர் படகுகளும்,  மீன்பிடி படகுகளும் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அவை நாளாந்தம் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படகுகள் எரிபொருள் நிரப்புவதிலும் படகுககளை கரை சேர்ப்பதிலும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கடற்றொழில் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளை, இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்து வருவதால் அவற்றை ஒழுங்கபடுத்தி கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இறங்குதுறையின் செயற்பாடுகளை இலகுபடுத்தி தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மயிலிட்டி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய இழுவைப் படகுகளாலும் துறைமுகத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

நிலைமைகளை அவதானித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறு தரித்து நிறுத்தப்பட்ட படகுகளை ஆழமான பகுதியில் நிறுத்தி வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பாக  தொழில் மற்றும் எதிபொருள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வருகைதரும் படகுகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத விகையில் பொறிமுறையை வகுத்து தீர்வுகளை காணுமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இதேவேளை தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை தொழில் நடவடிக்கைகளும் இப்பகுதியில் அதிகரித்து வருவதாகவும் அவற்றையும் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இவ்விடயம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்திய அமைச்சர், அவ்வாறான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க கூடாதெனவும் அவ்வாறு செயற்படும் தரப்பினரை தடுப்பதுடன் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் உரிய தரப்பினருக்கு உத்திவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply