கிளிநொச்சி பொது சந்தையில் நீர் வசதிகள் இல்லாமல் துன்பப்படும் வணிகர்கள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி சேவைச் சந்தையில் நீண்ட காலமாக நீர் வசதிகள் சீராக கிடைக்கப் பெறாமையின் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை விடுத்துள்ளனர்.
குறித்த சந்தையில் நீண்ட நாட்களாக நீர் வசதியின்மை காரணமாக பெரிதளவில் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமது வணிகத்திற்கு வருகை தரும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் கிளிநொச்சி சந்தைப் பகுதியில் உள்ள பொது மலசல கூடம் தூய்மையின்றி காணப்படுவதாகவும், இது தொடர்பாக பல தடவைகள் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவித்தும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் சந்தை வளாக வடிகால்களும் நீண்ட நாட்களாக துப்பரவு செய்யப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பெரிதளவில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் நோய்வாய்பட அதிக சாத்தியங்கள் உள்தாகவும் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக விரைந்து தமக்கான நீர் வசதியையும், துப்பரவு பணியையும் மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சந்தை பகுதிக்குள் அமைந்துள்ள மலசல கூடம் மற்றும் மீன் விற்பனை செய்யப்படும் பகுதிகளிற்கு உட்செல்ல முடியாதவாறு துர்நாற்றம் விசுவதாகவும்,  தண்ணீரின்மையால் பெரிதும் சிரமப்படுவதாகும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளாந்த ஜீவனோபாயத்தை பெறுவதற்காகவே இது அனைத்தையும் சகித்துக் கொண்டு இப்பகுதியில் பணிபுரிவதாகவும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *