திருமலையில் தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைப்பு…!

திருகோணமலையில் பின்தங்கிய தமிழ் பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிவோருக்கான  கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய தமிழ் பிரதேசங்களில் அமைந்துள்ள பல  பாடசாலைகளில் கணினி, கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லாத சூழல் நிலவுகின்றது. 

அந்தவகையில் வெருகல் கோட்டத்தில்   உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரி, திருவள்ளுவர் வித்தியாலயம் மற்றும் துவாரகா வித்தியாலயம்; மூதூர் வலயத்தில் உள்ள கங்குவேலி அகத்தியர் வித்தியாலயம், இலிங்கபுரம் தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆதியம்மன் கேணி தமிழ் வித்தியாலயம்; மொறவெவ கோட்டத்தில் உள்ள அவ்வை நகர் தமிழ் வித்தியாலயம்,  குச்சவெளிக்  கோட்டத்தில் உள்ள  திரியாய்த்  தமிழ்  மகாவித்தியாலயம் மற்றும் விவேகானந்தா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு கணிதம், கணினி மற்றும் அறிவியல் கற்பிக்க ஆசிரியர்  இல்லாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், தமிழ் மாணவரது  கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக  கல்வித் துறையின் வேண்டுகோளுக்கமைய திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் மேற்படி பாடசாலைகளுக்கு  தொண்டர் ஆசிரியர்களை நியமித்து மாதந்தோறும்  மதிப்பூதியம் வழங்கி வருகின்றது.

அந்தவகையில், 2024 கல்வி ஆண்டுக்கான பங்குனிமாதக் கொடுப்பனவு 2024/03/30 ஆம் நாளாகிய இன்று வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் கதிர்வேலு சண்முகம் குகதாசன், கனடா திருகோணமலை நலன்புரிச் சங்க தலைவர் தங்கவடிவேல் ரகுநாதன், அதன் நிர்வாக உறுப்பினர்  க. இலங்கேஷ்வரன் ஆகியோர் இக்கொடுப்பனவுகளை வழங்கி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply