ஆசிரியர் வெற்றிட கணக்கெடுப்பில் உள்ள குறைகளை நிவர்த்திக்க இம்ரான் எம். பி கோரிக்கை..!!

கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதில் கிண்ணியா கல்வி வலய வெற்றிடங்கள் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. 

எனவே இந்த வெற்றிடங்களை முழுமையாக உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

கல்வி அமைச்சு செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

சமீப காலத்தில் ஓய்வு பெற்ற மற்றும் சேவையில் இருந்து இடைநிறுத்த பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக் குழுவினால் தற்போது விண்ணப்பம் கோரப் பட்டுள்ளது.

இதில் கிண்ணியா கல்வி வலயத்தில் ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட வெற்றிடங்கள் முழுமையாக உள்வாங்க படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி ஆசிரியர் தொழில் சங்கத்தினால் எனது கவனத்திற்கு கொண்டு வரப் பட்டுள்ளது.

ஆரம்பக் கல்வி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு, தமிழ், இஸ்லாம் போன்ற பல பாட ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற போதிலும் இவற்றில் சில பாடங்கள் விண்ணப்பம் கோரும் அறிவித்தலில் உள்வாங்க படவில்லை.

இதனால் கிண்ணியா கல்வி வலய கற்றல் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.  

எனவே சகல வெற்றிடங்களையும் சரியாக கணித்து விண்ணப்பம் கோர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *