கச்சத் தீவை வைத்து அரசியல் செய்வதை இந்திய அரசு கைவிட வேண்டும்! ஆலம் எச்சரிக்கை

 

”கச்சத்தீவை வைத்து அரசியல் செய்வதை தமிழகமும் மத்திய அரசும் கைவிட வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என் எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 இந்தியாவின்  மத்திய அரசிலும்,  தமிழக அரசிலும்  புதிதாக ஒரு நிலைப்பாடாக கச்சத்  தீவு விடையம் தோன்றியுள்ளது.

இவ்விடயத்தினை அவர்கள்  அரசியலுக்காகப் பயன்படுத்தினாலும், அவர்களது செயலானது அங்குள்ள மீனவர்களை உற்சாகமூட்டி  சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை மேற்கொள்ளத் தூண்டும் விதமாகவே உள்ளது.

அதுமட்டுமல்லாது இலங்கையில் தனது ஆதிக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதும் இந்தியாவின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.

கச்சை தீவு விடையத்தை பல தடவை தமிழக அரசு தான் மேலோங்கச் செய்துள்ளது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கச்சத்  தீவை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையைத்  தொடர்ந்து தமிழகம் வலியுறுத்தி வருகின்றது.

இரு நாடுகளுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை கன்னியமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியலுக்காக பேசப்படும் விடையமாக இருந்தால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உறவிலும் மக்களின் மனதிலும் பாரிய எதிர்ப்பை உருவாக்கக்கூடும்.

எனவே கச்சை தீவை அரசியலுக்காக கையாள்வதை தமிழகமும்,மத்திய அரசும் கைவிட வேண்டும். இலங்கை அரசும் வடபகுதியில் உள்ள தமிழ் பிரதிநிதிகளும் இக்கருத்திற்கு எவ்வித கருத்துக்களையும் கூறுவதாக இல்லை. 

வட பகுதி மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்களையும் எதிர்ப்பையும் முன்னெடுத்து வருகின்ற போதும் அவர்கள் மௌனிகளாக உள்ளனர்.

கடற்தொழில் அமைச்சர் அதற்கு மேலாக ஒரு படி சென்று இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த ஒரு புறம் கருத்தைக் கூறுகிறார்.

மறுபுறம் இந்திய கம்பெனிகளின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களுக்கு கதவை திறந்து விடுகின்றார்.

அவர்கள் வந்து செயல்பாட்டை முன்னெடுக்க ஆதரவு வழங்குகின்றார்.அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பது கேள்விக்குறியாக உள்ளது – இவ்வாறு என் எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *