பொருளாதாரக் கொள்கை தொடர்பில் பகிரங்க விவாதம்…! அனுரவுக்கு சஜித் மீண்டும் சவால்…!

தனது பொருளாதார கொள்கை வகுப்பாக்கக் குழுவினரோடு மாற்று அணியின் பொருளாதாரக் குழுக்களையும் ஒன்றிணைத்து பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அனுரவுக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 154 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மொனராகலை, வெல்லவாய, தனமல்வில, கெத்சிரிகம கனிஷ்ட வித்தியலாயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு வங்குரோத்தடைந்துள்ள வேளையில், நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை மக்கள் ஆணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது , விவாதங்களும், வாதங்களும், தர்க்கங்களும், கலந்துரையாடல்களும் நடக்க வேண்டும்.

முன்மொழிவுகள், பார்வைகள் மற்றும் வேலைத்திட்டங்களை முன்வைக்காமல் எதனையும் பெற முடியாது.

சர்வதேச சமூகத்தின் தலைவர்கள் சந்திக்கும்போது தனிப்பட்ட சந்திப்புகள் கூட நடக்கின்றன. மொழித்திறன் இல்லை என்றால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறான திறமை இல்லாதவர்களுக்கு நாட்டின் தலைமைத்துவத்தை வழங்குவது மீண்டும் பாதாளத்தில் விழுவதைப் போன்றதாகும்.

விவாதம் நடத்த நான் எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றேன். இவ்வாறான விவாதங்களில் இருந்து தப்பியோட வேண்டாம்.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் எனது பொருளாதார கொள்கை வகுப்பாக்கக் குழுவினரோடு மாற்று அணியின் பொருளாதாரக் குழுக்களையும் ஒன்றிணைத்து விவாதம் நடத்துவோம் என நாகரிகமாக அழைக்கும்போது, கோழைகள் போன்று விவாதங்களில் இருந்து தப்பியோட வேண்டாம் எனப் புரட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *