மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் – இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

 

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.  மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த தொடர் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையர்கள் குழுவுடன் டுபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பான தகவல்களை அவர் விளக்கியுள்ளார்.

ஃப்ளை டுபாய்க்கு சொந்தமான FZ-1625 விமானம் நேற்றிரவு 20.10 மணியளவில் டெல் அவிவ் நோக்கி பயணித்த போது இந்த தாக்குதல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், விமானத்தை திசை திருப்பி டுபாய்க்கு பறக்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி அந்த விமானத்தில் இஸ்ரேலுக்கு வரவிருந்த இலங்கையர்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகம் அவதானம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் இலங்கைத் தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ஜோர்தான், லெபனான், ஈராக், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு பயணிக்கும் விமானங்கள் அந்த வான்வழிகளை தவிர்த்து வேறு வான்வழிகளில் மீண்டும் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு பயணிப்பதால் பயணங்களுக்கான நேரம் மற்றும் டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *