பொதுப் போக்குவரத்துச் சேவையில் சாரதிகள் வாகனம் செலுத்தும் போது போதைப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா என்பதைக் கண்டறியும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகரமான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையின் விஞ்ஞான விவகார உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பாவனை செய்வது தொடர்பில் ஆராயுமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்,
போக்குவரத்து அமைச்சு, தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு என்பன இணைந்து இது தொடர்பான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.
முதற்கட்ட நடவடிக்கையாக மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளில் கணிசமான அளவு போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.
சாரதிகள் இரவு மற்றும் பிற்பகல் வேளைகளில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்,
எதிர்காலத்தில் இதனை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு ஒழுங்குமுறைகளை தயாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்