மட்டக்களப்பில் இரு குடும்பஸ்தர்கள் பரிதாபமாக உயிரிழப்பு…!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று மாலை வெவ்வேறு பகுதிகளில்  இடம்பெற்ற சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும்,  மற்றையவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரது சடலங்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி இரு சம்பவங்கள் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தினால் நெஞ்சுப் பகுதியில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 43 வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்டவரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதே போன்று வழக்கம் போல முறுத்தானையில் உள்ள வெத்திலை போட்ட மடு குளப் பகுதியில் கட்டு வலை கட்டி மீன் பிடியில் ஈடுபட்டவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தையான மூ.மயில்வாகனம் வயது (67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி இருவரது சடலங்களின் உடற் கூற்றாய்வினை சுகாதார வைத்திய அதிகாரி எச்.எம்.எம்.முஸ்தபா மேற்கொண்டிருந்தார்.

மரண விசாரணைகளை கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி அ.ரமேஸ்ஆனந் மேற்கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *