கொலைகளை மறைப்பதற்கு புத்தகமா? மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரி போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரியும் தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு தண்டனைபெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று (21)கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது கொல்லப்பட்டவர்கள் நினைவாக காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இங்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்தவர்களுக்கான ஆத்ம ஈடேற்று வழிபாடும் முன்னெடுக்கப்பட்டது.

 ஐநாவில் வழங்கிய வாக்குமூலம் என்ன ஆனது, அதிகார இறக்கைக்குள் குற்றவாளிகளை மறைக்காதே, கொலைகளை மறைப்பதற்கு புத்தகமா?, கொலைசெய்தவர்களும் அஞ்சலி செலுத்தும் அவலம், வேண்டும்,வேண்டும் நீதிவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *