ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (23.04) இடம்பெறடற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை.
எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம்.
இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும்.
வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1500 உம் வழங்கப்பட்டு வருகின்றது.
கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது.
எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு.
மாவட்ட மட்டத்தில் 1000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும்.
இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது.
இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும.
அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது.
ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள்.
ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள்.
நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள்.
மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எனத் தெரிவித்தார்.