தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக தற்போதுள்ள காணொளிகள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்திருந்தனர்.
அவர்களில் 15 பேர் தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலையிலும் மூவர் பதுளை போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதுகாப்பு நடைபாதையில் போட்டியை பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது கார் ஒன்று தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விபத்து தொடர்பில் இரண்டு பந்தய கார் சாரதிகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.