மூதூரில் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் மேன்காமம் குளம்…! சாணக்கியன் எம்.பி எடுத்த நடவடிக்கை…!

மூதூரில்  ஆக்கிரமிக்கப்பட்டுவரும் மேன்காமம் குளத்தின் பகுதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று(27) நேரில் சென்று பார்வையிட்டார். 

இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேன்காமம் குளத்தின் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வருவதாகவும், கனரக வாகனங்களை பயன்படுத்தி குளத்தின் பகுதிகளை சேதப்படுத்தி அங்கிருக்கும் நீரை வெளியேற்றி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் கிராம மக்கள் முறையிட்டதையடுத்து குறித்த பகுதிக்கு இன்றைய தினம் (27) நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறித்த ஆக்கிரமிப்பை பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டிருந்தார்.

அத்துடன் இது தொடர்பாக மத்திய நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதற்கான நடவடிக்கை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

மேன்காமம் குளமானது நீண்ட காலமாக காலத்திற்கு காலம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.

இதன்மூலம் குளத்தின் பெரும்பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையினால் மேன்காமம் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயம், நன்னீர் மீன்பிடி, கால்நடை வளர்ப்பு ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பலருடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் எதிர்காலத்தில் குளம் இல்லாத சூழல் ஏற்படலாம் எனவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை எல்லைப்படுத்தி குளத்தினை தூர்வார்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு குளத்தினை ஆக்கிரமித்து வருகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு குளத்தை பாதுகாக்க உதவுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *