மக்களே அவதானம்…! பாரிய மண்சரிவு அபாயம் தொடர்பில் அறிவிப்பு…!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில்  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எல்ல – வெல்லவாய வீதியில் கரந்தகொல்ல பிரதேசத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த வாரம் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உமா ஓயா திட்டத்தின் சுரங்கப்பாதையில் நீரை நிரப்பியதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதா என்பது நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலை ஆராய்ச்சி மூலம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

எல்ல – கரந்தகொல்ல பிரதேசத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மலித்தகொல்ல எனும் சாய்வான பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் மண்சரிவு ஏற்படும் நிலை காணப்படுவதால் அப்பகுதி மக்களிடையே இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புவியியல் இருப்பிடத்தின்படி, எல்ல – கரந்தகொல்ல பிரதேசமானது உமாஓயா திட்டத்தின் கீழ் டயரம்பா நீர்த்தேக்கத்திற்கு கீழே சுமார் 2.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் அவ்விடத்தில் மண்சரிவுகள் அவ்வப்போது இடம்பெற்று வருவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தளத்தின் ஒழுங்கற்ற நிலப் பயன்பாட்டுத் தன்மை மற்றும் அப்பகுதியின் மேற்பரப்பு மற்றும் உள் வடிகால் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான காரணிகளால் மீண்டும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமை காரணமாக எல்ல வெல்லவாய வீதியும் பாதிக்கப்படக் கூடும் என்பதால், சாரதிகள் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *