போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலையில் வழக்கு தாக்கல்

  

போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில்  இன்று  வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மன்றில் சமர்ப்பணம் செய்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் சமர்ப்பணம் செய்கையில்,

மெய்யுறுதிப்படுத்தப்படாத முகநூல் நிகழ்நிலைக் கணக்கினை பயன்படுத்துபவரது ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

குறித்த முகநூல் கணக்கு பயன்படுத்தப்படும் அமைவிடம் அவற்றோடு தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பற்றிய விடயங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

அத்துடன் முகநூல் நிறுவனத்திடமிருந்தும், டயலொக் நிறுவனத்திடமிருந்தும் மேற்குறித்த விடயங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை உடனடியாக பெறுவது தொடர்பாகவும் அவற்றை உடனடியாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பது தொடர்பாகவும் தேவையானதும், 

அவசியமானதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு 01இல் செயற்படுகின்ற குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணிணிக் குற்றங்கள் விசாரணைப் பகுதியின் சமூக ஊடகப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிடுவதற்கான கட்டளையினை பிறப்பிக்குமாறு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட விண்ணப்பங்களை ஏற்ற மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா கட்டளையை பிறப்பித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *