நிரந்த காணி உரிமைகளை வழங்குவதற்கானபுரட்சிகர வேலைத்திட்டம்! ஜனாதிபதி

 

நிரந்த காணி உரிமைகளை வழங்குவதற்கான புரட்சிகர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“மரபுரிமை” வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு இலவச காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவை ரோயல் மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த அரங்கில் இருக்கும் அனைவரும் அனுமதி பத்திரங்களுடன் மாத்திரமே வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இங்கிருந்து வெளியேறும் போது காணி உரிமையாளர்களாக செல்வீர்கள்.

உங்கள் காணிக்கு நிரந்தர உரித்து கிடைக்கும். நமது சமூகத்தில் காணி உரிமை கௌரவமாக பார்க்கப்படுகிறது. காணியின் பெறுமதி எமக்கான அந்தஸ்தாகவும் மாறும்.

இந்நாட்டில் பெருமளவானர்களுக்கு அவர்கள் பரம்பரையாக வசித்த காணிக்கு சட்டபூர்வமான அனுமதி கிடைக்கவில்லை. உறுமய திட்டத்தின் கீழ் அந்த காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படும்.

அதன் பின்னர் நீங்கள் எவருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. உங்களுக்கு கிடைக்கும் நிரந்தர காணி உரிமையை இரத்துச் செய்யவும் அதிகாரம் இல்லை.

நாம் அனைவரும் கடந்த மூன்று வருடங்களில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தோம். நாட்டின் பொருளாதாரத்தை போலவே நமது பொருளாதாரமும் சரிவடைந்தது.

கைகளில் பணம் இருக்கவில்லை.அனைவரும் கஷ்டங்களுடன் வாழ்ந்தனர். தற்போது பொருளாதார நெருக்கடிகளுக்கு நாம் படிப்படியாக தீர்வு கண்டு வருகிறோம்.

இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க முடிந்தது.

தனியார் துறையிலும் பல நிறுவனங்கள் சம்பள அதிகரிப்புச் செய்தன. தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்றார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *