மொட்டுவின் வேட்பாளரே 9 ஆவது ஜனாதிபதி – கட்சியின் செயலர் கூறுகின்றார்..!!

“இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாகப் பதவி பிரமாணம் செய்யும் நபரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷக்களுடனே உள்ளார்கள்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

பத்தரமுல்லைப் பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாட்டு நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது;:-

“தேர்தலுக்கு அச்சமடைய வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

தேர்தல் செயற்பாட்டு நிலையத்தை நாங்கள் திறந்து வைத்துள்ளோம். ராஜபக்ஷக்கள் மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடைய வேண்டிய தேவையில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகின்றார்கள்.

ஆனால், பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷக்கள் பக்கமே உள்ளார்கள். நாட்டின் ஒருமைப்பாடு, தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்தியே பொதுஜன பெரமுன செயற்படுகின்றது என்பதைப் பெரும்பான்மையின மக்கள் அறிவார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எமக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் எதுவும் கிடையாது. அரசியல் கொள்கையில் மாத்திரமே மாறுப்பட்ட தன்மை காணப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து அவரிடம் பேச்சில் ஈடுபட்டுள்ளோம். அத்துடன் கட்சி மட்டத்திலும் பேச்சில்  ஈடுபட்டுள்ளோம்.

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்யும் நபரையே ஜனாதிபதி வேட்பாளராகக்  களமிறக்குவோம். பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்கள் இறுதித் தருணத்தில் எம்முடன் ஒன்றிணைவார்கள்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *