மூத்த பிரஜைகளின் வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை கருத்திற்கொண்டு, சிரேஷ்ட பிரஜைகளின் வைப்பு வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய விரிவான அறிக்கையை மிக விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு முன், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வங்கி மற்றும் நிதி நிறுவன கணக்குகளில், ஆண்டுக்கு 15%க்கு மிகாமல் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வந்தது, ஆனால் தற்போது இந்த வட்டி சதவீதம் ஒற்றை இலக்க சதவீதமாக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது.
இந்நிலைமையினால் வட்டி வருமானத்தில் வாழ்ந்த முதியவர்கள் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.
இதனையடுத்து, இவ்விடயத்தை கவனமாகவும் அனுதாபத்துடனும் பரிசீலித்து மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி விரிவான அறிக்கையை கோரியுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.