முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தமிழர் தாயகம் முழுவதும் பல்வேறு தடைகளை தாண்டி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை, எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் வார இறுதி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று புதுக்குடியிருப்பு கோம்பாவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கோம்பாவில் கிராமத்தில் இறுதி உயிரை காப்பாற்ற உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியானது இன்றைய தினம்(16) வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தகரை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
முல்லைப் பங்கை சேர்ந்த பங்குத்தந்தைகள் மற்றும் புனித கார்லோ இளையர் ஒன்றிய ஏற்பாட்டில் முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தகரை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இன்றையதினம்(16) நடைபெற்றது
இதன்போது பாதிரியார்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் முன்னெடுப்பு
தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று (16) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தாயக உறவுகள் நினைவேந்தல் குழுஆகியன இணைந்து முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டிடத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(16) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது பொதுமக்கள், அருட்தந்தையர்கள் ,இளைஞர்கள், யுவதிகள் உட்பட அதிகளவான மக்கள் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தி சென்றனர்.
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(16) முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி உழவனூர் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்று(16) கிளிநொச்சி மாவட்டத்தில் உழவனூர் பகுதியில் நிகழ்வு இடம்பெற்றது.
உழவனூர் இளைஞர்கள் ஏற்பாட்டில் முல்லைவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கப்பட்டது.
மன்னார் நானாட்டானில் மழைக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மன்னார்-நானாட்டான் பஸ் நிலைய பகுதியில் இன்று (16) காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடும் மழைக்கு மத்தியிலும் இடம்பெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மக்கள்,தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.