பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பாராமுகம் …!வடமாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டு…!

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களின்  கற்றல் செயற்பாடு தொடர்பில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுவதாக வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தால்  இன்று(26) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 25 நாட்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அனைத்து பல்கலைக் கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைமையில்  02.05.2024 நண்பகல் 12 மணியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் நீண்ட நெடுங்காலப் பிரச்சினைகள் தொடர்பானது ஆகும்.  2016ஆம் ஆண்டிலிருந்தே பல கட்ட கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகள் நடாத்தியும், கல்வி அமைச்சுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும்  அளவுக்கதிகமான கால அவகாசம் வழங்கப்பட்டும்,  இதுவரை தீர்வு எதனையும் வழங்காமல் தங்கள் கோரிக்கைகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகப்படுவதையிட்டு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

 பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்கும் செயற்பாட்டின் ஒரு அங்கமே இப்பாராமுகம் என நடுநிலையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு தொழிற்சங்க சம்மேளனம் என்ற கோதாவிலும், எமது சம்மேளனத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஒரு அங்கமாக உள்ளது என்ற அடிப்படையிலும் அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு இனியும் தாமதிக்காமல் உரிய தீர்வை வழங்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வி இவ்வேலைநிறுத்தம் காரணமாக தவிர்க்க முடியாதவாறு தடைப்பட்டுள்ளதையிட்டு அரசாங்கம் அக்கறையற்றிருப்பதும் அரச பல்கலைக்கழகங்களை புறக்கணித்து தனியார் பல்கலைக்கழகங்களை மட்டும் ஊக்குவிப்பதற்குத்தானோ எனவும் நாம் ஐயுறுகிறோம் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *