கார்த்திகைப்பூ பதிக்கப்பட்ட காலணிகள்…!தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் தென்னிலங்கை நிறுவனம்…! ஐங்கரநேசன் கண்டனம்…!

தென்னிலங்கையில் பிரபல காலணி உற்பத்தி நிறுவனமொன்று கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட காலணிகளை விற்பனைக்கு விடப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் இதனை தாம் வன்மையாகக்  கண்டிப்பதாகவும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தில் இன்றையதினம்(28) இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கார்த்திகைப் பூ வெறும் பூ அல்ல, தமிழ் மக்களின் வாழ்வியலிலும் உணர்வுகளிலும் தமிழ்த் தேசிய அரசியலிலும் இரண்டறக் கலந்துள்ள அவர்களின் உயிர்ப்பூ . 

இது தென்னிலங்கை நிறுவனமான பாதணி உற்பத்தி நிறுவனத்துக்குத் தெரியாததல்ல. 

ஆனாலும் ,தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் விதத்தில் இந்நிறுவனம் தனது இலேசுரக  காற்செருப்புகளில்  கார்த்திகைப்பூவைப் பொறித்து விற்பனைக்கு விட்டுள்ளது.

இது மிகவும் வன்மையாகக்  கண்டிக்கத்தக்கது.  குறித்த காலணி உற்பத்தி நிறுவனம் கார்த்திகைப்பூ பொறிக்கப்பட்ட  காற்செருப்புகளை விற்பனையில் இருந்து மீளப்பெறல்வேண்டும். 

தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியமைக்காக  வருத்தமும் தெரிவிக்கவேண்டும் எனவும் ஐங்கரநேசன் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் புத்தபெருமானின் உருவத்தை உடலில் பச்சை  குத்தியவர்களும், பெளத்த  சின்னங்கள் அச்சிட்ட  ஆடைகளை அணிந்தவர்களும் பெளத்தத்தை  அவமதித்ததாக,பெளத்த மதத்தினரின் மனதைப் புண்படுத்தியதாகக் கூறி   காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .

தமிழ் மக்களைப்  பொறுத்தவரையில் கார்த்திகைப்பூவும் புனிதமான ஒன்றாக, அவர்களின் தேசிய அடையாளங்களில்  ஒன்றாகக்  கருதப்படுகின்றது . 

இதனால் ,கார்த்திகைப்பூவைக்  காற்செருப்பில்  பொறித்திருப்பதைத்  தங்களை இழிவுபடுத்தும் ஒன்றாகவே அவர்கள் கருதுகின்றார்கள். தமிழ் மக்களின் மன உணர்வைப் ப்புரிந்துகொண்டு குறித்த நிறுவனம்  நிறுவனம் உடனடியாக  இக்காற்செருப்புகளைச்  சந்தையில் இருந்து மீளப்பெறல்வேண்டும்.

வடக்கில் தமிழ்ப் பாடசாலையொன்றில்  விளையாட்டுப் போட்டியின்போது  இல்லங்களை அழகுபடுத்துவதற்கெனக்   கார்த்திகைப்  பூவின் உருவத்தைக்  காட்சிப்படுத்தியமைக்காகக்  கல்லூரிச் சமூகமே  காவல்துறையால்  விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.

ஆனால் , கார்த்திகைப் பூவைப் பொறித்த காற்செருப்புகளின் விற்பனைக்குக்  காவல்துறை  எவ்வித குந்தகங்களும் செய்யவில்லை. இதுதான் பேரினவாதத்தின் மனோ நிலை .

எனவே ,குறித்த நிறுவனம் கார்த்திகைப்பூ பொறிக்கப்பட்ட  காற்செருப்புகளை  விற்பனையில் இருந்து மீளப்பெறும் வரைக்கும்,  இந்த அநாகரீக இழிசெயலுக்காக  தமிழ் மக்களிடம்  வருத்தம் தெரிவிக்கும் வரைக்கும்,  தமிழ் மக்கள் குறித்த நிறுவனத்தின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்யாது புறக்கணிக்கவேண்டும்  என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *