தமிழ் பொதுவேட்பாளர் முன்னெடுப்புக்கு யாழ்ப்பாணம் வணிகர் கழகமும் ஆதரவு

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள்இ சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக நேற்று மாலை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடனான சந்திப்பு நடைபெற்றது. 

பொதுவேட்பாளர் விடயத்தில் தொடர்ச்சியான செயற்பாட்டில் இருக்கும் சமூக (சிவில்) அமைப்புகளின் கூட்டிணைவு சார்பாக கலந்துகொண்ட பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் செயலாளர் உட்பட்ட முக்கிய உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் யாழ் வர்த்தக சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான நோக்கம் அதன் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாக பேசப்பட்டிருக்கிறது.

சந்திப்பின் ஆரம்பத்திலேயே பொதுவேட்பாளரின் அவசியத்தை முன்னிறுத்தி அது விரைவாகவும் வீரியமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை வர்த்தக சங்கத்தினர் முன் வைத்திருக்கின்றனர். 

இது பொதுவேட்பாளர் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும் சமூக நிறுவனங்கள் மத்தியிலும் தன்னியல்பாக தோன்றியுள்ளமையின் வெளிப்பாடு என சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சந்திப்பில் பொதுவேட்பாளர் முன்னெடுப்பில் தொடர்ச்சியாக இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைவில் யாழ் வர்த்தக சங்கமும் இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பான தமது அறிக்கையை முன்வைப்பதாகவும் ஊடகங்கள் ஊடாக தமது உடன்பாட்டையும் இதன் அவசியத்தையும் வெளிப்படுத்தி தொடர்ந்து இக்கோரிக்கையை வலுப்படுத்துவதில் பங்காற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தின் முக்கியத்துவம் கருதி வேறு பல சமூக நலன் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் செயற்படும்  அமைப்புகளும் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *