ஜனாதிபதி தேர்தலில் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு இழுத்து செல்லவே பொது வேட்பாளர் நாடகம் – கஜேந்திரன் எம்.பி

இந்தியாவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் எனவும் ஜனாதிபதி தேர்தலில் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு இழுத்து செல்லவே பொது வேட்பாளர் நாடகம் நிகழ்த்தபடுவதாகவும் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடாத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ் கொக்குவிலில் அமைந்துள்ள அக் கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ….

கடந்த காலத்தில் ஒற்றையாட்சிக்குள் 13-வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவர் முன்வந்து மோடிக்கு கையொப்பமிட்டு அனுப்பினார். 2016 ஆம் ஆண்டு ரணில் மைத்திரி கூட்டமைப்பு தயாரித்த ஒற்றையாட்சி வரைபினையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறாக  விக்னேஸ்வரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்க்கும் இடையில் எந்தவித இடைவெளியும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியாவின் முகவராக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துகின்ற செயற்பாட்டிலேயே விக்னேஸ்வரன் தொடர்ந்து செயற்படுகின்றார். 

இன்று இந்திய மேற்குலக நாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற சூழல் இருக்கின்றது. தமிழ் இனம் சார்ந்த கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க  வடக்கிற்கு  வருகை தருகின்ற பொழுது அவருக்கு செங்கம்பளம் விரித்து இவர்கள் வரவேற்பது கண்டிக்கத்தக்கது. 

விக்னேஸ்வரன் பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதை பிற்போடுவதை வரவேற்றிருக்கின்றார். ஆனால் குறித்த தேர்தல்கள் உரிய காலத்தில் நடாத்தப்பட வேண்டும் என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய நிலைப்பாடாக காணப்படுகிறது.

தேர்தல் பிற்போடப்படுவது ஜனநாயக படுகொலையையே நிகழ்த்தும்.

தமிழ் மக்கள் பேரவையில் பல தேசியகருத்தியல்களை உள்ளடக்கி  உள்ளே நுழைந்தார் ஆனால்  இந்திய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவர் செயற்பட்டார். உலகில் எங்கும் இல்லாத வகையில் ஒரு நீதியரசர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கி அதன் பின்னர் கொள்கை பற்றி பேசலாம் என தெரிவித்தார். 

இது ஒரு உலக அதிசயம். இந்தியா காலால் இடுகின்ற கட்டளையை தலையால் நிறைவேற்றுகின்றவர் தான் விக்னேஸ்வரன். ஆகவே இந்தியாவை பிடி கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர் பொதுவேட்பாளர் விடயத்தில் இந்தியா இல்லை என கூறினாலும் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைக்க வேண்டுமானால் தமிழ் மக்கள் வாக்கு வசாவடிகளுக்கு செல்ல வேண்டும் தமிழ் மக்களுக்கு அந்த மனநிலை இல்லை.

ஆகவே வாக்கு சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களிக்கும் மனநிலையை உருவாக்கவே இந்த பொதுவேட்பாளர் நாடகம் அரங்கேறியுள்ளது.

இன்று கூட்டமைப்பினர் சொல்லும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை.  இவ்வாறு மக்கள் வெறுப்படைந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக கூறியே விக்னேஸ்வரன் போன்றோர் செயற்படுகின்றனர்.

அவ்வாறு பொதுவேட்பாளர் யாரும் நிறுத்தபட்டால் கூட அவர் 72 மணித்தியாலத்திற்கு முதல் சொல்ல கூடும் எமது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களில் ஒரு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர் அவருக்கு வாக்களியுங்கள் என கூறி விலக கூடும். 

இல்லையெனில் இரண்டாவது விருப்பு வாக்கை சிங்கள வேட்பாளருக்கு வழங்க கூடும் .

இதன் காரணமாக எதிர் நிலையில் இருக்கூடிய மக்களின்  மனநிலையை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லவே இந்த நாடகம் ஆடப்படுகன்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *