பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் விரும்பினாலும் ஜனாதிபதித் தேர்தலை எவராலும் ஒத்திவைக்க முடியாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம்(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதிக்கு தெரியாமல் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தொடர்பில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சி அறிக்கைகளை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டாரவின் கருத்துக்கு எதிராக மக்களின் வாக்குரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்காமல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பின் மூலம் மக்களின் இறைமை நேரடியாகப் பாதுகாக்கப்படுவதால், தேர்தல் அச்சம் காரணமாக அரசாங்கம் பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டு வருகின்ற போதிலும் அதனை அழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.
இந்த தேர்தலை பிற்போட முயற்சித்தால் அதற்கு எதிராக பொதுமக்களை திரட்டி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.