திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் விமர்சனம்…!முகநூல் பதிவொன்றிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்…!

திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் கோணேசர் ஆலய வழக்கு தொடர்பில் விமர்சித்த போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக நேற்று (29) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

செல்வக்கண்டு கனகநாயகம் விஜயநாதன் என்பவரினால் 2024ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் பிரிவு 26 (1) இல் உள்ள ஏற்பாடுகளின் கீழ் குறித்த வழக்கானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி திருமதி. சின்னத்தம்பி சண்முகி தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மன்றில் தனது சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

குறித்த வழக்கு தொடர்பில் சமர்ப்பணம் செய்கையில்,

ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்பட முடியாததுமான குறித்த முகநூலால் வெளியிடப்பட்டுள்ள மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் மற்றும் செய்திகள் மூலம் தனக்கும் தனது சார்பாக TR/02/94 (A)  ஆம் இலக்க வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கும் குறித்த TR/02/94 (A)  ஆம் இலக்க வழக்கத் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருப்பதுடன் தானும் தனது சட்டத்தரணிகளும் அவதூறுக்கு உட்படுத்தப்பட்டும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டும் உள்ளார்கள் எனவும் மனுதாரர் கூறுகின்றார்.

எனவே மெய்யுறுதிப்படுத்தப்படாத முகநூல் கணக்கினை பயன்படுத்துபவரது அல்லது நிர்வகிப்பவரது ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், குறித்த முகநூல் கணக்கு பயன்படுத்தப்படும் அமைவிடம் அவற்றோடு தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பற்றிய விடயங்கள் மனுதாரரால் எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள வழக்கிற்கு அவசியமாக உள்ளமையால் கௌரவ மன்றானது தனது நியாயாதிக்கத்தை பிரயோகித்து முகநூல் நிறுவனத்திடமிருந்து மேற்குறித்த விடயங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை உடனடியாக பெறுவது தொடர்பாகவும் அவற்றை உடனடியாக  நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பது தொடர்பாகவும் தேவையானதும், அவசியமானதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு 01இல் செயற்படுகின்ற குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணணிக் குற்றங்கள் விசாரணைப் பகுதியின் சமூக ஊடகப் பிரிவின் பணிப்பாளருக்கு மேற்குறித்த விபரங்கள் மற்றும் நிகழ்வுகளை உடனடியாக பெறுவது தொடர்பாகவும் அவற்றை உடனடியாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பது தொடர்பாகவும், தேவையானதும் அவசியமானதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடுவதற்கான கட்டளையினை பிறப்பிப்பிக்குமாறும் சிரேஷ்ட சட்டத்தரணி தனது சமர்ப்பணத்தில் வேண்டிக் கொண்டார். குறித்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணியுடன் சட்டத்தரணி எம்.பி.அன்பார் மற்றும் சட்டத்தரணி திருமதி. சின்னத்தம்பி சண்முகி ஆகியோர் மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்தார்கள்.

சிரேஷ்ட சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணம், மனுதாரரின் மனு, சத்தியக்கடதாசி மற்றும் அணைக்கப்பட்ட ஆவணங்கள் என்பவற்றை பரிசீலித்து அவற்றை கவனத்தில் எடுத்து மனுதாரர் தனது மனுவில் கூறுயவாறு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். 

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத முகநூல் பதிவுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்படுகின்ற இரண்டாவது வழக்கு இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *