யாழில் படையினருக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு…! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்…!

யாழ் மாவட்டத்தில் படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் காணிகளை அளவீடு செய்வதை நில அளவைத் திணைக்களம் நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத் தீர்மானத்தை ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் ஆகியோரின் தலைமையில் இன்று(30)  நடைபெற்றது.

இதன் போது  கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,

யாழ் மாவட்டத்தில் படையினருக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்க தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய இன்றும் கூட சுழிபுரத்தில் மக்களின் காணிகளை படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவீடு செய்ய இருந்தனர்.

எனினும் காணி உரிமையாளர்கள் பொது மக்கள் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் காணி அளவீடு செய்ய அங்கு வந்திருந்த நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருக்கின்றனர்.

இவ்வாறு பல இடங்களிலும் காணி அளவீடு செய்ய வருகின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

ஆனாலும் பொது மக்களின் காணிகளை படையினருக்கு வழங்க முடியாது. அத்தோடு படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்வதையும் நிறுத்த வேண்டும் என்பதுடன் தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதன் போது படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்.

இதனையடுத்து யாழ் மாவட்டத்தில் படைகளின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை நில அளவைத் திணைக்களம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அத் தீர்மானத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இத் தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்மொழிய பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வழிமொழிந்தார்.

இக் கூட்டத்தில் இராணுவம், பொலிஸார், அரச திணைக்கள அதிகாரிகள் அரசியல்வாதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *