அடுத்த 05 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு திட்டம்

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், 05 வருடங்களுக்குள் நாட்டின் சகல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, பல்கலைக்கழகங்கள் மீது இது குறித்த பரந்த பொறுப்பு சார்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் AI தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பல்கலைக்கழக கல்வியலாளர்களுடன் நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு, இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கு 2027 – 2040 வரை கால அவகாசம் இருப்பதாகவும், 2035 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான சமூக-பொருளாதார மாற்றத்துக்காக நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் லியுறுத்தினார்.

2035 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்படும் புதிய பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு AI இன் வகிபாகம் முதன்மையாக இருக்க வேண்டுமென் என்பதோடு, நவீன தொழில்நுட்பத்தில் தெற்காசியாவின் அடையாளமாக இலங்கையை மாற்றுவதற்கான இயலுமை காணப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

AI தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்கள் பலவற்றின் பேராசிரியர்கள் மற்றும் கல்வியலாளர்களினால் கூட்டாக தயாரிக்கப்பட்ட பிரேரணையும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பல பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே AI தொழில்நுட்பத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய கல்வியலாளர்கள், அந்த திட்டங்களின் செயல்பாடு மற்றும் இலக்குகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

நாம் செயற்கை நுண்ணறிவுடன் முன்னேறினால், மற்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவுக்குள் பல தொழில்நுட்பங்கள் உள்ளடங்கியுள்ளன. அதனை நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்தே ஒரு நாடு என்ற வகையில் முன்னேற்றத்தை அடையலாம். முன்பு நாம் தகவல் தொழில்நுட்பத் துறையில் செய்த தவறை மீண்டும் செய்ய முடியாது.

தகவல் தொழில்நுட்பத் துறை திட்டங்களில் பயன்படுத்துவது குறித்து மாத்திரமே இதுவரையில் கவனம் செலுத்தியிருக்கிறோம். அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அதன் பலனாகவே தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு சில நாடுகளை விடவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம்.

செயற்கை நுண்ணறிவை (AI)விரிவுபடுத்த பாடசாலைகளுக்குள் AI சங்கங்களைத்(AI Societies) தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். மேலும், பல்கலைக்கழகங்களில் செயற்கை நுண்ணறிவை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும். முக்கியமாக தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு 4 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம். பொறியியல் பீடங்கள் இல்லாத பல்கலைக்கழகங்களில் பொறியியல் பீடங்களைத் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் பரவியுள்ளது. தெற்காசியாவில் ஒரு தனித்துவமான அடையாளத்தை நாம் பதிப்பதற்கு அந்த தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கும் இது பயனளிக்கும். செயற்கை நுண்ணறிவுக்கும் பௌத்த தர்மத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய்வது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *