
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (16) தெரிவித்தார்.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த குறித்த சிறுமி, தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த போது, நேற்று (15) உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நுவரெலியா டயகம பகுதியை சேர்ந்த 16 வயது 8 மாதங்கள் வயதுடைய சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கடந்த ஜூன் 3 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இந்த சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகள் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், பொரளை பொலிஸாரால் இதுவரை 10 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பிரேத பரிசோதனை மற்றும் வாக்குமூலங்கள் தொடர்பான அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர் நீதிமன்றின் ஊடாக அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.