எமது நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவைகள் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக விளங்குகின்றன. ஆனால் அண்மைக்காலமாக சில சாரதிகளின் நிதானமின்மை மற்றும் ஒழுங்கற்ற ஓட்டுநடைமுறைகள் காரணமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக சித்த வைத்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சித்த வைத்தியர்கள் வெளியிட்ட அறிக்கையில், இதன் விளைவாக கைகள், கால்கள் மற்றும் எலும்பு மற்றும் தசை பாதிப்புடன் பலரும், குறிப்பாக முதியோர்கள், சித்த வைத்திய நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முதியோரின் உடல் நலம் மற்றும் வாழ்வாதாரத்தை தீவிரமாக பாதிப்பதோடு, அவர்களின் குடும்பங்கள் பொருளாதார சுமையிலும் சிக்கி வருகின்றன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பொதுப் போக்குவரத்து அமைச்சருக்கு முதியோர் நலப்பிரிவின் இணைப்பாளர் மருத்துவர் வ. பிரவின் அவர்களின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட கோரிக்கையில் சில முக்கிய பரிந்துரைகளை முன்வைக்கப்பட்டுள்ளன.
1.பொதுப் போக்குவரத்து சாரதிகளுக்கான மனஅழுத்தக் கட்டுப்பாடு மற்றும் நிதான ஓட்டுநடைமுறை பயிற்சி அவசியம்.
2.ஒவ்வொரு ஓட்டுநருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை உடல் மற்றும் மனநலம் சார்ந்த மருத்துவ பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.
3.நீண்ட நேர ஓட்டத்தை தவிர்க்க நேரக்கட்டுப்பாடு மற்றும் ஓய்வு இடைவெளி முறைகள் அமைக்கப்பட வேண்டும்.
4.போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள், சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் வகையில் முதியோர் நலத் திட்டங்களுடன் இணைத்து நடத்தப்பட வேண்டும்.
சாரதிகளின் உடல் மற்றும் உளநிலை மேம்பட்டால் மட்டுமே மக்களின் உயிர் மற்றும் உடல் நலம் பாதுகாக்கப்படும். இதனை அரசாங்கம் அவசர முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும். குறிப்பாக பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் இரவுநேரங்களில் கண்விழித்து வாகனத்தை செலுத்துவதால் அவர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என்றும் குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் பிரதிகள் ஒன்பது மாகாண ஆளுநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





