5 நாட்கள் வெளிநடப்புக்குப் பின்னர், இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள் இன்று (22) பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் தொழில்துறை நடவடிக்கையைத் தவிர்க்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) உறுதியளித்துள்ளார்.
ஐந்து நாள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.00 மணி முதல் மருத்துவர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான சாதனை அளவில் வைரஸ் தொற்றுடன் மருத்துவமனையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உயர்ந்து வரும் காய்ச்சல் பாதிப்புகளுக்கு மத்தியில் இந்த தொழில்துறை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த வேலைநிறுத்தத்தின் தாக்கம் புத்தாண்டுக்கும், அதற்குப் பின்னரும் உணரப்படும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், எதிர்காலத்தில் மருத்துவர்களின் மற்றுமோர் வேலைநிறுத்தங்களைத் தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீடிங் கூறியுள்ளார்.
2026 ஆம் ஆண்டில் தேசிய சுகாதார சேவையில் ஒரு நாள் கூட தொழில்துறை நடவடிக்கையை முன்னெடுப்பதை பார்க்க நான் விரும்பவில்லை, இதை நனவாக்க என்னால் முடிந்த அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வேன் என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
அதேநேரம், பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்துடன் (BMA) பேச்சுவார்த்தைகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் தொடங்கும் என்றும் கூறினார்.
ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொர்பான சர்ச்சையினால் நாட்டின் மருத்துவப் பணியாளர்களில் சுமார் 50 சதவீதமானோரைக் கொண்ட வதிவிட மருத்துவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கடந்த வாரம் பணிப்கிஷ்கரிப்பை ஆரம்பித்தது.
டிசம்பர் 17 அன்று தொடங்கிய வேலைநிறுத்தம், தேசிய சுகாதார சேவையின் மிகவும் பரபரப்பான காகலகட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியருந்தது.




