
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களே அதிகளவில் சாவு
30 வயதைக் கடந்த ஒரு லட்சம் பேர் தடுப்பூசி பெறவில்லை
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக் காரணமாக இதுவரை 578 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில், கடந்த ஓகஸ்ட் மாதம் 228 பேரும், இந்த மாதம் முதல் 12 நாள்களில் 169 பேரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த வர்களில் அநேகமானோர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்களே தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் மூலமாக கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தையும், உயிரிழப்பையும் தவிர்க்கவோ, குறைக்கவோ கூடியதாக இருக்கும். எனவே அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு வலியுறுத்திக் கூறியுள்ளார், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்.
இது தொடர்பில் அவர் அனுப்பிய செய்திக் குறிப்பில்,
வடக்கு மாகாணத்தில் தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடக்கு மாகாணத்தில் இதுவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 150 பேருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது வடக்கு மாகாணத்திலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 வீதமாகும்.
2ஆவது தடுப்பூசி 4 லட்சத்து ஆயிரத்து 494 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 62 வீதமாகும்.
வடக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை.
தொற்றாளர் தொகை
கடந்த ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதி தொடக்கம் வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் இதுவரை மொத்தமாக 32ஆயிரத்து 844 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்களில் 14 ஆயிரத்து 480 தொற்றாளர்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்திலும் 5 ஆயிரத்து 847 தொற்றாளர்கள் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 12 நாள்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.
தடுப்பூசியைத் தவறவிடாதீர்!
எனவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான பெருந்தொற்றுச் சூழலிலே உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு எம்மிடமுள்ள முக்கியமான உபாயம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதே. எனவே, இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரையும் உடனடியாகச்சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம். – என்றுள்ளது.





