நல்லூர் பிரதேச சபை அமர்வில் கருத்து மோதல்!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை அமர்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ப.மயூரன் தலைமையில் இன்று (செவ்வாய்யக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தில் உக்காத கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

விவாதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகம் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல் இடம்பெற்றதன் காரணமாக சபையில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் செ.சிவலோசன் குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றும்போது மயானத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கத்திலேயே உக்கக்கூடிய கழிவுகளை கொட்டி மயான பகுதியினை உயர்த்தும் முகமாகவே சபையினால் உக்கக் கூடிய கழிவுகள் கொட்டப்பட்டது என தெரிவித்தார்.

எனினும் நல்லூர் பிரதேச சபையைச் சேர்ந்த சில கட்சிகளின் உறுப்பினர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்த இடத்திற்கு சென்று மக்களை குழப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்ததோடு, திட்டங்களை குழப்பம் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்தோடு தமக்கு தவிசாளர் பதவி கிடைக்காததால், இவ்வாறு குழப்பும் செயற்பாட்டில் குறித்த உறுப்பினர்கள் ஈடுபடுகிறார்கள் எனவும் கடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் நல்லூர் பிரதேச சபையினரால் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அத்தோடு தற்பொழுது த.மயூரன் தவிசாளராக பொறுப்பேற்ற பின்னர் பிரதேச மட்டங்களில் அபிவிருத்தி செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாகவும்அதனை விரும்பாத சில கட்சிகளின் உறுப்பினர்கள் அதனை கெடுக்கும் முகமாக மக்களை தூண்டிவிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே, சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply