
வாழ முடியாத நாடாக மாறுகிறது இலங்கை
மைத்திரி அணி கடும் சீற்றம்!
‘இலங்கை இன்று மக்கள் வாழமுடியாத நாடாக மாற்றம் பெற்று வருகின்றது – இவ்வாறு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘கடந்த பொதுத் தேர்தலில், கொள்கை ரீதியாக எமது கட்சி தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவே முன்நின்று செயற்பட்டது. வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள பொதுச் சொத்துக்களை மீளக் கைப்பற்றுவதாகவும் அறிவித்திருந்தது.
துரதிஷ்டவசமாக இன்று எதனை விற்பனை செய்யலாம் என அரசு வகை தேடுகின்றது. வயல் நிலங்கள், பெறுமதியான காணிகள், தொழிற்சாலைகள் என அனைத்தையும் அரசு விற்பனை செய்து வருவதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.
சொத்துக்களை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு சொத்துக்களை விற்பனை செய்கின்றது. கொழும்பு துறைமுகத்தைச் சேர்ந்த பகுதிகளும் இன்று விற்பனை செய்யப்படவுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அதேபோல் இன்று தொழிற்துறையில் நிபுணர்கள் பலரும் அரசின் குழுக்களிலிருந்து விலகி வருகின்றனர்.
மேலும், பலர் இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். வாழமுடியாத நாடாக இலங்கை மாறி வருகின்றது. இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காக கொள்கை ரீதியிலான மாற்றம் தேவைப்படுகின்றது’ – –என்றார்.





