மக்களுக்காக வாழ்ந்தவர்களை மரணத்தால் வெல்ல முடியாது-மாமனிதர் விக்னேஸ்வரனின் நினைவேந்தல்

மக்களுக்காக வாழ்பவர்கள் மரணத்தால் வெல்லப்பட கூடியவர்கள் அல்ல என்று மாமனிதர் விக்னேஸ்வரனின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஶ்ரீஞானேஸ்வரன் தெரிவித்தார்.

அவரது பிரத்தியேக அலுவலகத்தில் (08) நடைபெற்ற மாமனிதர் விக்னேஸ்வரனின் 16 ஆவது ஆண்டின் நினைவேந்தலில் அஞ்சலி உரை நிகழ்த்தும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

மாமனிதர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் உரிமைக்குரலாக திருகோணமலையிலிருந்து ஒலித்தார். அவர் தமிழ் மக்களுக்காக போராடிய காலம் மிக முக்கியமானது. விடுதலைப் போராட்டம் முனைப்பு கொண்டு மிக உச்சம் தொட்ட அந்த காலத்தில் சிங்களப் பேரினவாதம் திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக நடவடிக்கைகளில் ஒன்றாக மக்களின் மண்ணைக் கபளீகரிக்கும் நடவடிக்கைகளை புத்தர் சிலைகளை நிறுவி அதனூடாக நிகழ்த்திக் கொண்டிருந்த காலம்.

அந்த காலத்தில் மக்கள் நிறுவப்படுகின்ற புத்தர் சிலைகளுக்கு எதிராக போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த பொழுது அதற்குத் தலைமை தாங்குபவராக விக்னேஸ்வரன் செய்யப்பட்டு வந்தார்.

தமிழர்களை தலைமைதாங்கி வழி நடத்தும் தமிழ் தலைவர்களை சிங்களப் பேரினவாத அரசு தனது ஆயுதப் படைகள் மற்றும் ஒட்டுக் குழுக்களின் ஊடாக குறிவைத்து இல்லாதொழிக்கும் நடவடிக்கை மேற்கொண்ட காலம் அது.

அந்தக் காலத்தில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு பெரும்பாலானவர்கள் தயங்கி நின்ற வேளையில் விசேடமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் கொழும்பில் பதுங்கியிருந்த காலத்தில் மாமனிதர் விக்னேஸ்வரன் இந்த மண்ணிலிருந்து மக்களை தலைமை ஏற்று சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

தன்னுடைய உயிர் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்பதை தெரிந்திருந்தும் கூட அதைப் பற்றி சற்றேனும் சிந்திக்காது மக்களுக்காக போராடியவர் 16 ஆண்டுகளுக்கு முன் அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.

உலகமே அறிந்திருந்த கொலையாளிகள் இன்றுவரை நீதிப் பொறிமுறையின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப் படவில்லை. அவருடைய சாவு நமக்கு ஒரு செய்தியைச் சொல்லி சென்றிருக்கின்றது ஸ்ரீலங்கா நீதி பொறிமுறையானது ஒருபோதும் தமிழருக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை என்பதுதான்.

அவரை நினைவுகூர்கின்ற ஒவ்வொரு கணத்திலும் இந்த செய்தி உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவர் விட்டுச் சென்ற பாதையில் தமிழ் மக்களாகிய நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் என்று இந்த ஆண்டு நினைவேந்தலிலும் நாம் உறுதி எடுத்துக் கொள்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *