ரிசாட் வீட்டில் இறந்த சிறுமிக்கு நீதி கேட்டு வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதினின் வீட்டில் சிறுமி தீ எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில், முறையான விசாரணையினை வலியுறுத்தியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் என்னும் அமைப்பினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு தாண்டவன்வெளி சந்தியில் குறித்த சிறுமியின் கொலைக்கு எதிரான கோசங்களைக்கொண்ட பல்வேறு பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் உயிரிழந்த சிறுமிக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த போராட்டத்தில் தமிழ்-முஸ்லிம் பெண்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறுமியின் படுகொலைக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

வீட்டு வேலை தொழிலாளர் உரிமைகளுக்கு சட்டம் வேண்டும்,ஹிசாலினிக்கு நீதிவேண்டும்,வீட்டு வேலையும் தொழில்தான் சட்டம்வேண்டும்,நான் வேலைக்காரி இல்லை தொழிலாளி போன்ற கோசங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

வீட்டுவேலைத் தொழிலுக்கான வயதெல்லை, கொடுப்பனவு, விடுமுறை, மற்றும் பாதுகாப்பு உட்பட, மேலும் இவ்வாறான சம்பவங்கள் வீட்டுவேலைத் தொழிலில் நிரந்தரமாக ஏற்படாமல் இருப்பதற்கான பொறிமுறைகளையும் அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும். என வலியுறுத்தி, வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் அரசிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றது.

(1) சட்டத்திற்கு முரணாக சிறுமியை வேலைக்கமர்த்தியமைக்கு எதிராக,

(2) சிறுமியை சித்திரவதைக்கு உட்படுத்தியதற்கு எதிராக,

(3) சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமைக்கு எதிராக,

(4) சிறுமியின் உயிரிழப்புக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்பதோடு, மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் நிகழாது இருப்பதற்கு பின்வரும் விடயங்களில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

வீட்டுவேலைத் துறை தொழிலாளர்கள் தொழில் சட்டத்திற்குள் உள்வாங்கப்படல் வேண்டும்.
வீட்டுவேலைத் துறையை கண்காணிக்க சிறந்த பொறிமுறை ஒன்றினை நடைமுறைப்படுத்த வேண்டும்.

Leave a Reply