சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன்நின்று தப்பிக்கக்கூடாது – வாசுகி வல்லிபுரம்

குற்றவாளிகள் சட்டத்தின் முன் தப்பிக்கொள்வதற்கு சட்டங்கள் அனுமதிக்காத வகையில் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்த சிறுவர் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கவனயீர்ப்பு பேரணியின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்பொழுது நாட்டில் நிலவிவரும் தேசிய பேரிடர் காரணமாக நாட்டு மக்கள் மரண ஓலங்களையும், மரண அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கியிருக்கின்ற இந்த சூழ்நிலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கெதிரான பாலியல் ரீதியிலான கொடுமைகள், கொலைகள் மற்றம் துஸ்பிரயோகங்கள் என்பன கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இதனால் பல சிறுமிகள் சீரழிக்கப்படுகின்றமையை நாங்கள் அறிகின்றோம். இதற்கு எதிராக நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம். துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுகின்ற சிறுவர்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்களிற்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறான சூழ்நிலை காணப்படுமிடத்து எதிர்வரும் காலங்களில் சிறுவர்களும், பெண்களும் பாதுகாக்கப்படுவார்கள்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply