தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா பிணையில் விடுவிப்பு!

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள 79வயதான ஜேக்கப் ஸூமா, தனது சகோதரர் மைக்கேல் ஸூமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, கருணை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தென்பாபிரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த ஜேக்கப் ஸூமா, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளானார்.

ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக தற்போதைய ஜனாதிபதி சிறில் ராமபோசா தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜேக்கப் ஸூமா கடந்த 2018ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஸூமாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் அவர் நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக அவருக்கு கடந்த மாதம் 29ஆம் திகதி 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 7ஆம் திகதி ஜேக்கப் ஸூமா பொலிஸாரிடம் சரணடைந்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைப் போராட்டத்தில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Leave a Reply