மர்ம பொதியால் வவுனியாவில் பதற்றம்

வவுனியா நகரப்பகுதியில் காணப்பட்ட மர்மப்பொதியால் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.

வவுனியாவில் கொப்பேகடுவ சிலைக்கு முன்பாக இன்று (23) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை இனப்படுகொலையை நினைவு கூர்ந்தும், இனப்படுகொலைக்கு நீதி கோரியும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டம் முடிவடைந்த சிறிது நேரத்தில் குறித்த பகுதியில் இருந்த கொப்பேகடுவ சிலைக்கு முன்பாக இராணுவ சீருடையில் தயாரிக்கப்பட்ட பை ஒன்று காணப்பட்டுள்ளது.

இதனை அவதானித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பொதியருகே எவரையும் செல்ல விடாது பாதுகாத்தனர்.

அதன்பின்னர் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, குண்டு செயலிழக்கச் செய்யும் கருவி மூலம் குறித்த பொதி சோதனையிடப்பட்டது.

இதன்போது குறித்த சிலையருகே இருந்த வர்த்தக நிலையங்கள் சிறிது நேரம் மூடப்பட்டதுடன், கண்டி வீதி ஊடாக போக்குவரத்தும் 20 நிமிடங்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தது.

சோதனையின் போது குறித்த பொதியில் ஆலய துண்டு பிரசுரங்களும், அதிஸ்ட லாப சீட்டு ரிக்கட்டுகளும், வேறு சில தாள்களும் காணப்பட்டன.

அதனை மீட்ட அதிரடிப்படையினர் அவற்றை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *