விசேட வைத்திய நிபுணர்களுடைய இடமாற்றம் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்

விசேட வைத்திய நிபுணர்களுடைய இடமாற்றப் பட்டியல் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினுடைய மத்திய குழு மற்றும் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்தமை,

இக் கொரோனாக் காலத்தில் சுகாதார சேவையிலே பல்வேறுபட்ட குறைபாடுகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை விசேட வைத்திய நிபுணர்களுடைய இடமாற்றப் பட்டியல் சரியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்பதாகும்.

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களின் தேவை இருக்கின்றபோதும், அங்கே விசேட வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படாமையின் காரணமாக, பல்வேறு தரப்பினர் அளெகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு ஒரு சீரான சுகாதார சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்காக, வைத்தியர்களை சரியான முறையில் நியமனம் செய்து, மக்களுக்கு சரியான சுகாதார சேவை கிடைப்பதற்கு முன்னின்று உழைத்த சங்கமாகும்.

ஆனால், தற்போது பல்வேறுபட்ட ஆதார வைத்தியசாலையில், சில மாகாணங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட நிபுணர்களுடைய பற்றாக்குறை நிலவுகின்றது.

இதற்குப் பிரதான காரணியாக இருப்பது சுகாதார அமைச்சு. ஏனெனில், சரியான முறையில் விசேட வைத்திய நிபுணர்களின் இடமாற்றப் பட்டியலைத் தயாரித்து அதனை சரியான முறையில் அமுல்படுத்தாததே இதன் காரணமாகும்.

ஆகவே, கடந்த வருடத்தில் கிட்டத்தட்ட 748 விசேட வைத்திய நிபுணர்கள் இந்த இடமாற்றப் பட்டியலுக்கு தகுதி பெற்று, இடமாற்றத்திற்காக தங்களுடைய கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

எனினும், இந்த இடமாற்றப்பட்டியல் கடந்த நவம்பர் முதலாம் திகதி தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுல்படுத்த வேண்டியிருந்தது.

ஆனால், இந்தப் பட்டியலைத் தயாரித்து, வெளியிடுவதற்கு 9 மாத காலதாமம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணத்தால் விசேட வைத்தியர்களின் இடமாற்றத்தை சரியான முறையில் செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இரண்டு சத்திரசிகிச்சை அலகுகளும், இரண்டு விசேட வைத்திய நிபுணர்களே உள்ளனர். அதாவது, வெற்றிடங்கள் காணப்படுகின்றது.

ஆனால், சுகாதார அமைச்சு, விசேட வைத்திய நிபுணர்களின் இடமாற்றப் பட்டியலை சரியான முறையில் செயற்படுத்தப்பட முடியாமையால் இங்கு இருக்கும் இரண்டு சத்திரசிகிச்சை அலகிலும், வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படவில்லை.

இதனால், இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், இடமாற்றப் பட்டியலில் இருக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் மூன்று தரப்பினரும் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு, விசேட வைத்திய நிபுணர்கள் யாரும் இல்லாதவிடத்து இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யவேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, சரியான முறையில் விசேட வைத்திய நிபுணர்களுடைய இடமாற்றப் பட்டியல் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *