கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை! சண்முகநாதன்

வடமராட்சி கிழக்கில் பாரம்பரிய மீன்பிடி தொழில்களான கரவலை மற்றும் சிறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம்பெற இருக்கின்ற கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றிருந்தன.

போராட்டங்களில் வடமராட்சி கிழக்கு மக்கள் முழுமையாக பங்கெடுத்திருந்தார்கள். அதுதொடர்பில், சம்பந்தப்பட்ட மக்களை அழைத்து அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.

இது தொடர்பில், பல கல்விமான்களும் கடல்நீரை நன்னீராக்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்கள். அக் கருத்துக்களை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உரையாடலில் ஏற்றுக்கொண்டு நல்ல செய்தி ஒன்று தரப்பட்டது.

இதனடிப்படையில், வடமராட்சி கிழக்கில் ஆறுமுகம் திட்டத்தை அமல்படுத்துவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

மீனவ மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் இந்த உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் பல இடங்களில் தோல்வி கண்டுள்ளது. அதனால், ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மீண்டும் வலியுறுத்துவதாகவும், கொரோனாப் பெருந்தொற்று நிலைமை மோசமாக இருக்கும் இந்த நிலைமையில் இந்தத் திட்டத்தாலும் எமது மக்களுடைய நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

மேலும், வடமராட்சி கிழக்கில் மணக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரை பாரம்பரிய கரவலை தொழிலேயே ஈடுபடுவதாகவும், இதில் ஒரு கரவலையில் குறைந்தது 30 இக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுவதாகவும், 60க்கும் மேற்பட்ட கரவலைப் பாடுகளைக் கொண்ட எமது பிரதேசத்தில் இந்தத்; திட்டம் கொண்டுவரப்பட்டால் அந்த தொழில்கள் முற்றுமுழுதாக பாதிப்படையும்.

இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று அப்போதும் சரி இப்போதும் சரி தாங்கள் மாற்றுக்கருத்து வைத்துக்கொள்ளவில்லை. இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டுதான் அவர்கள் ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்திருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply