பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம்- தோட்ட அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

தோட்ட அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் ஒன்றினை வழங்கவேண்டும் என சிலொன் தோட்ட அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தோட்ட அதிகாரிகளின் கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுமானால் பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம் என அச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியா நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் ரவீந்திர சேனரத்ன இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தோட்ட முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள் உட்பட்ட தோட்ட அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதற்கு முன்னர் நாம் எடுத்துரைத்திருந்தோம்.

தோட்ட அதிகாரிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரினோம்.

ஆனால், இவை தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் உரிய கவனம் செலுத்தவில்லை.

எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கலாம். அதைகூட செய்யவில்லை. தோட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் அவர்களால் பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

அப்படி இருந்தும் பணி புறக்கணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் நாம் ஈடுபடாமல் தொழிலில் ஈடுபட்டு வந்தோம். அத்துடன் நாளாந்தம் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

எனவே, எமது பிரச்சினைகள் தொடர்பில் செவிசாய்த்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பெருந்தோட்டத்துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம்.

இதேவேளை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு நேரம் வழங்கப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply