குற்றவியல் தண்டனை சட்டத்தின் 291A4 ஷரத்தின் கீழ் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக வழக்கை தொடருமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இதனை தெரியப்படுத்தியுள்ளனர்.
மத உணர்வுகளை பாதிக்கும் கருத்தை வெளியிட்டுள்ளதாக ஞானசார தேரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி ஞானசார தேரர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார். அதில் இஸ்லாமிய புனித நூலான புனித அல் குர் ஆனை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ஞானசார தேரருக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான ஞானசார தேரர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த ஒரு நாடு – ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்